கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஈரானின் 52 இடங்களை குறித்து வைத்துள்ளதாகவும், ஈரானுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த 52 இடங்களை அதிவேகமாகச் செயல்பட்டு அழித்துவிடுவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தனது ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்து பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில், "52 இடங்களைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்து கருத்துப்பதிவிட்டவர்கள் 290 என்ற எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். #ஐஆர்655 ஒருபோதும் ஈரான் நாட்டை மிரட்டல் விடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார். கடந்த 1988 ஆம் ஆண்டு, 66 குழந்தைகள் உட்பட 290 பேர் பயணித்த ஈரான் விமானம் ஒன்றை அமெரிக்காவின் வின்செனஸ் போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். தவறுதலாகச் சுட்டுவிட்டோம் என்று பதில் அளித்த அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோராதது சர்ச்சையானது. இந்நிலையில் இதனை நினைவுபடுத்தும் விதமாக ருஹானி எச்சரித்துள்ளார்.