நேற்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "தன் நாட்டைத் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பது போல, அமெரிக்காவுக்கும் அந்த உரிமை உள்ளது. அமெரிக்க மக்கள் உட்பட பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு சுலைமான் முக்கியக் காரணமாக இருந்தார்" என தெரிவித்துள்ளார்.