Skip to main content

இந்துவா? முஸ்லிமா? - மதத்தைக் கேட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்; வெளியான பகீர்!

Published on 23/04/2025 | Edited on 23/04/2025

 

Illegal gropu who thrash based on religion in pahalgam jammu kashmir

ஜம்மு - காஷ்மீரின் பஹல்கம் எனும் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (22-04-25) பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், பஹல்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களைக் கண்டறிந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், தாக்குதலின் போது பயங்கரவாதிகளின் நடவடிக்கை குறித்தும் அவர்கள் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் குறித்தும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளிடம் மதத்தைக் கேட்டு தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் தொழிலதிபரான தந்தை சந்தோஷ் ஜக்தலே மற்றும் மைத்துனர் கவுஸ்துப் கன்போட் ஆகியோரையும் இழந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த அசாவரி என்ற பெண், தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். சந்தோஷ் ஜக்தாலேவின் மகளான அசாவரி அதில் பேசுகையில், ‘சுற்றி பல சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். ஆனால் பயங்கரவாதிகள், ஆண் சுற்றுலாப் பயணிகளை இந்துவா? அல்லது முஸ்லிமா? என்று கேட்டு தாக்குதல் நடத்தினர். பீட்டாப் பள்ளத்தாக்கில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ பகுதியைச் சுற்றிப் பார்த்தபோது, ​​துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக பாதுகாப்புக்காக அருகிலுள்ள கூடாரத்திற்கு விரைந்தோம். ஆறு முதல் ஏழு சுற்றுலாப் பயணிகளும் அவ்வாறே செய்தனர். துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாப்பாக நாங்கள் அனைவரும் தரையில் படுத்துக் கொண்டோம். இந்த தாக்குதல் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்ததாக நாங்கள் கருதினோம். 

உள்ளூர் போலீஸ் போலவே சீருடை அணிந்த பயங்கரவாதிகள் எங்கள் கூடாரத்திற்குள் நுழைந்து எனது தந்தையை வெளியே அழைத்தனர். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து விசாரித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லப்போவதில்லை என்று அவர்கள் கூறினர். தாக்குதல் நடத்தியவர்கள் எனது தந்தையிடம் இஸ்லாமிய வசனத்தை ஓதச் சொன்னார்கள். அவர் அவ்வாறு செய்யத் தவறியபோது, ​​அவர்கள் அவரை நோக்கி மூன்று தோட்டாக்களை சுட்டனர். என் மாமாவும் என் கண்முன்னே இறந்து கிடந்தார். அவர் மீதும், நான்கைந்து தோட்டாக்களைச் சுட்டனர். அவர்கள் அந்த இடத்தில் இருந்த பல ஆண்களைச் சுட்டனர். ராணுவமோ அல்லது போலீஸோ என அங்கு உதவிக்கு யாரும் இல்லை. 20 நிமிடங்கள் கழித்து தான் அவர்கள் வந்தார்கள். அங்கிருந்த உள்ளூர்வாசிகள் கூட இஸ்லாமிய வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்’ என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்