
தூத்துக்குடியின் திரேஸ்புரம் பகுதியின் மீனவரான ஆனந்த சைரஸ் அண்மையில் தான் அங்கிருந்து லயன்ஸ் டவுண் ஏரியாவின் ராஜகோபால் நகருக்கு குடும்பத்துடன் வந்த அவர், அங்கு வசித்தபடியே மீன் பிடி தொழிலை மேற் கொண்டு வந்திருக்கிறார். மீன் பிடிப்பதற்காக ஆழ் கடலோடு மல்லுக் கட்டி விட்டு உடல் தாங்காகளைப்புடன் கரைவருகிற ஆனந்த் சைரஸ் அலுப்பைப் போக்குவதற்கு அவ்வப் போது குடிப்பதுண்டாம். குடித்த பின்பு அவராகவே வீட்டின் முன்பிருந்தபடி தனக்குத் தானே சலம்பிக் கொண்டிருப்பாராம்.
சில பல விவகாரம் காரணமாக ஆனந்த சைரசிற்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கருப்பசாமி என்பவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவது வழக்கமாம். கடந்த 19ம் தேதி இரவு வழக்கம் போல் குடிபோதையில் ஆனந்த சைரஸ் சலம்பிக் கொண்டிருந்திருக்கிறார். அது சமயம் கருப்பசாமிக்கும் சைரசுக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறதாம். கருப்பசாமி சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அந்தக் காவல் நிலையத்திலிருந்து ஆனந்த சைரசின் வீட்டிற்கு வந்த மூன்று போலீசார், வந்த வேகத்தில், “என்னல மப்புல ஆட்டமா.. “ என்று ஆனந்த் சைரசிடம் விசாரணை நடத்திய போலீசார், கடுமையான வார்த்தைகளை விட்டிருக்கிறர்களாம். இதற்குள் வீட்டின் முன்பாக அந்தப் பகுதி மக்கள் திரண்டபோதும் வார்த்தைகளால் போலீசார் அத்துமீறியதோடு ஆனந்த சைரசைத் தாக்கியுமிருக்கிறார்களாம்.

இதற்குள் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பதறிக் கொண்டு வந்த ஆனந்த சைரசின் மனைவி சரோபினாவும், மகனும், “ஐயா, என்னோட கணவர் தவறு செய்யலைய்யா. குடிபோதையில அவராவே புலம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து பக்கத்து வீட்டுக் கருப்பசாமி, தன்னைத் தான் அவர் திட்டுறார்னு தவறா போலீஸ்ல சொல்லிட்டாருய்யா. தயவு பண்ணி அவர விட்டுறுங்கய்யா...” என்று போலீசாரிடம் மன்றாடியிருக்கிறார் மனைவி. ஆனால் போலீசார், குடும்பத்தோடு தூக்கி உள்ளாற வைச்சுறுவோம்ல..” என அப்பகுதி மக்கள் முன்பாகவே அவதூறாகப் பேசவே, அவமானத்தால் மனம் உடைந்து போன ஆனந்த சைரஸ் திடீரென்று வீட்டிற்குள்ளே ஒடி அங்கிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றித் தீக்குளித்திருக்கிறார்.
மனைவி மற்றும் மக்களின் கண்முன்னே தீ உடலில் பற்றிக் கொண்டு எரிவதையும், உடல் கருகி சைரஸ் கதறிக் கொண்டிருப்பதையும் பார்த்துப் பதறியிருக்கிறார்கள். இதனால் மிரண்டு போன போலீசார் தீயை அணைத்து ஆம்புலன்ஸ், மூலம் உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு போய் சேர்த்துள்ளனர். உடல் கருகிய ஆனந்த சைரசுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனின்றிப் போகவே ஏப்-22 மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சைரசின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பறிபோனதால், அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், அவர் தற்கொலை செய்வதற்கு காரணமான மூன்று போலீசார் மீது நீதி விசாரணை நடத்தி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அது வரை உடலை வாங்கப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்றம் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்க, அதிகாரிகளோ இந்த விவாகாரத்தில் தீவிர கவனத்தை மேற் கொண்டிருக்கிறார்களாம். ஏரியாவின் சூழலோ பதற்றமும் பரபரப்புமாகப் போய்க் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள்.