வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மக்கள், அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறதி. பங்களாதேஷ் தேசிய இந்து மகா கூட்டணியின் கூற்றுப்படி, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் 48 மாவட்டங்களில் 200 இடங்களில் நடந்துள்ளன. இந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்துக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், ‘வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எனது கண்காணிப்பில் ஒருபோதும் நடக்காது. கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்துக்களை புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலில் இருந்து உக்ரைனுக்கு நமது சொந்த தெற்கு எல்லை வரை பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்கி, வலிமையின் மூலம் அமைதியை மீட்டெடுப்போம்.
எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும் எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனான எங்கள் சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம். மேலும், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். விளக்குகளில் எரியும் தீபம், நன்மையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.