
திருவண்ணாமலையில் மயானத்தின் தகன மேடையில் நள்ளிரவில் பலி பூஜை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதனையொட்டிய மயானத்தின் தகன மேடையில் நேற்று நள்ளிரவு சென்னையைச் சேர்ந்த பலராமன், ஒரு பெண்மணி, ராஜபாண்டி என்ற மாந்திரீகர் மற்றும் அடையாளம் தெரியாத மூவர் என மொத்தம் ஆறு பேர் சேர்ந்து பலி பூஜை மேற்கொண்டுள்ளனர்.
ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றை அறுத்து பலியிட்டு பூஜை மேற்கொண்டுள்ளனர். நடு இரவில் பூஜை நடைபெறுவதற்கான சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கடலாடி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்த நிலையில், இருவர் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பலராமன் தோஷம் கழிப்பதற்காக ஐந்து நபர்களுடன் அந்த பகுதியில் முகாமிட்டதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
பூஜை நடத்தியவர்கள் கையில் மனித எலும்புகள், மண்டை ஓடு மற்றும் குழந்தைகள் பால் குடிக்கும் பால் பாட்டில் இருந்ததால் அங்கு குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நள்ளிரவு பூஜை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.