
இன்னும், மூன்று முதல் நான்கு வாரங்களில் கரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகின்றது. 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிலடெல்ஃபியாவில் பேசிய அதிபர் ட்ரம்ப், கரோனா தடுப்பு மருந்தை நெருங்கிவிட்டதாகக் கூறினார். முந்தைய அரசாக இருந்தால் தடுப்பு மருந்தினை பயன்பாட்டுக்குக் கொண்டு வர பல ஆண்டுக்காலம் எடுத்திருக்கும். ஆனால், தன்னுடைய அரசு இன்னும் சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது எனத் தெரிவித்தார். நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்வதற்காக ட்ரம்ப் தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.