பிரேசிலில் நடைபெற்று வந்த சீன நிறுவனத்திற்கு சொந்தமான கரோனா தடுப்பூசி ஆய்வின் போது மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதையடுத்து, தடுப்பூசி ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக இரவு பகலென முழுவீச்சில் நடந்து வந்த பணிகளில், பல ஆய்வுகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. சீன நாட்டைச் சேர்ந்த சினோவாக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுகள் பிரேசில் நாட்டில் நடைபெற்று வந்தது. அதில் கலந்துகொண்ட தன்னார்வலர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதையடுத்து, பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் (ANVISA), சினோவாக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
தன்னார்வலர்களுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகளின் முழு விவரங்கள் குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வாஷிங்டன்னில் நடைபெற்று வந்த அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி-யின் பரிசோதனை ஆய்வுகளும் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.