அண்மையில் வரலாற்று சந்திப்பாக பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடக்கோரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடா பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பும் உலக நாடுகளால் ஒரு முக்கிய சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு பின்லாந்து தலைநகர் எல்சின்கியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் சிரியா போர் மற்றும் உக்கிரைன் குறித்த நிலவரங்கள் பற்றி அலசுவதற்கான பேச்சுவார்தையாகவும், சந்திப்பாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்-புதின் சந்திப்பானது அண்மையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் அதிபர் புதின் சந்திப்பில் உறுதிசெய்யப்பட்டு தற்போது சந்திப்பிற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த புதன் அன்று ரஷ்யா சார்பில் இந்த சந்திப்பு பற்றிய அறிவிப்பு ரஷ்ய வெளியுறவு கொள்கை அதிகாரி யூரி உஷாகோவால் உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு அருகிலுள்ள மூன்றாவது நாட்டில் நடைபெறலாம் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது.
ரஷ்ய அதிபர் புதின், ஏற்கனவே அமெரிக்கா- ரஷ்யா இடையே நல்லுறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார் என்றாலும் இந்த சந்திப்பு இருநாட்டுக்கும் இடையேயான நல்லுறவை ஏற்படுத்த வழிவகுக்கும். அதேபோல் என்றுமே ரஷ்யா அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்ததில்லை ஆனால் அமெரிக்காவில் ஏற்படும் உள்நாட்டு மோதல் போக்கே அதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.