இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இந்நிலையில் இலங்கையின் எட்டாவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார்.
இலங்கையில் 8வது அதிபர் தேர்தல் 16.11.2019 சனிக்கிழமை அன்று நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 5,564,239 வாக்குகள் (41.99%) பெற்று தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து திங்கட்கிழமை அன்று அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெற்ற நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 8வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இலங்கை அதிபராக பதிவியேற்றப்பின் உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, “இந்த நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாளான உதவிகள் அனைத்தையும் செய்வேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் முழு மூச்சுடன் இறங்கி செயல்படுவேன். நாட்டிலுள்ள புறாதானமான அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மதம், இனம் என்று பாராமல் எல்லா மக்களையும் ஒரேவிதமாக வழிநடத்துவேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தார்.