Skip to main content

சென்னையில் தனியார் பேருந்து; தனியார்மயத்திற்கான அடுத்தக்கட்டமா?- அன்புமணி

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
TN govt should not allow private mini buses to operate in Chennai

சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு  அனுமதிக்ககூடாது என பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும்,  பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக உயர்த்த வேண்டும்; அவற்றில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொதுப்போக்குவத்துப் பயன்பாட்டை அதிகரித்து, சென்னையில் மகிழுந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அதன் வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். இதை நோக்கி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால்,  மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னையில் ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சென்னையில் தனியார் மூலம் மாநகரப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதித்திருப்பதை, போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

சென்னையில் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில்  பேசிய மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், ``சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும். 25 கிமீ வரை மினி பேருந்துகளை இயக்காமல், 6 முதல் 8 கிமீ வரை மட்டுமே இயக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அப்படியானால், போதிய எண்ணிக்கையில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான திறன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு இருப்பதாகத் தான் பொருள். ஆனால்,  போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனரின் எதிர்ப்பையும் மீறி தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன?

எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவதாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால், சென்னையில் தனியார் மினி பேருந்துகள் பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்படும் என்று, அந்த மாதம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வருகிறது என்றால், அதற்கான முன்னேற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டன, தனியார் மினி பேருந்துகளை இயக்க யார், யாருக்கெல்லாம் அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது?  மினி பேருந்துகளை இயக்குவதற்கான உரிமங்கள்  எவ்வாறு வழங்கப்பட்டன? அதற்கான பொது அறிவிப்பு ஏதேனும்  வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டனவா? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அவை அனைத்திற்கும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சென்னையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இப்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவேளை சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான உரிமங்கள் எற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அது சட்ட விரோதம் ஆகும். அவ்வாறு  உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்