ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு தங்கள் இடைக்கால அரசை அமைத்து ஆட்சி செய்துவருகின்றனர். தலிபான்களின் இந்த அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில் இந்தியா போன்ற ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள நாடுகள், தலிபான்கள் ஆட்சியின் காரணமாக தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளனர்.
இந்தநிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் சோவியத் நாடுகளின் பாதுகாப்புத்துறை தலைவர்களுடன் நடைபெற்ற காணொளிக் கூட்டத்தில் பேசும்போது அவர், "ஆப்கானிஸ்தானின் நிலை கடினமற்றதாக இல்லை. ஈராக், சிரியாவிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் அனுபவம் வாய்ந்த தீவிரவாதிகள் அங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளில் உள்ள நிலைமையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி செய்யலாம். அவர்கள் எல்லைகளை நேரடியாக விஸ்தரிக்கவும் முயற்சிக்கலாம்" என கூறியுள்ளார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும், அதன் அண்டை நாடான தஜிகிஸ்தானில் ரஷ்யா இராணுவ பயிற்சியை நடத்தியதும், அங்குள்ள தனது இராணுவ தளத்தில் ஆயுதங்களை அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ரஷ்யா தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.