ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தலிபான்களுக்குப் பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் நேற்று (17.08.2021) ஃபேஸ்புக் நிறுவனம், தங்களது தளத்தில் இருந்து தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும், அவர்களை ஆதரித்து வெளியிடப்படும் பதிவுகள் நீக்கப்படும் என்றும் அறிவித்தது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பதால் எங்களது சேவைகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தலிபான்களால் அல்லது தலிபான்கள் சார்பாக பராமரிக்கப்படும் கணக்குகளை அகற்றுவோம். மேலும், தலிபான்களைப் புகழ்வது, ஆதரிப்பது மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துவது உள்ளிட்டவற்றையும் தடை செய்வோம்" எனக் கூறினார்.
அதன்படி தலிபான்களின் ஃபேஸ்புக் முடக்கப்பட்டது. இந்நிலையில், தலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அங்கீகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.