ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
தலிபான்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். இதனால் தற்போது இராணுவம் மூலம் மீட்புப் பணிகளை நடத்திவரும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஆப்கான் விவகாரம் குறித்து பேசிய ஜோ பைடன், மீட்புப் பணிகளுக்கான கால அளவை நீட்டிக்க ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்தார். இதன்பின்னர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடிக்காவிட்டால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.
இந்த சூழலில், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவரும், தலிபான்களின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பாரதரும் நேற்று இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லையென்றாலும், மீட்புபணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் எனவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.