உலகிலேயே இந்தியாவில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்த டெல்டா வகை கரோனா, அதிக ஆபத்தானதான ஒரு வகையாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை கரோனாவே காரணமாக அமைந்தது. மற்ற வகை கரோனாக்களை விட டெல்டா வகை கரோனா, 50 சதவீதம் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது.
தற்போது இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வகை கரோனா அதிகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை தரவுகளை வெளியிட்டுள்ள தடுப்பூசிகளை விட ஸ்புட்னிக் v தடுப்பூசி டெல்டா வகை கரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறனைக் கொண்டிருப்பதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியீட்டிற்காக அறிவியல் பத்திரிகையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது. வல்லுநர் ஆய்வுக்குப் பிறகு அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்புட்னிக் v தடுப்பூசியை இந்தியாவில் செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டாலும், இன்னும் முழு வீச்சில் மக்களுக்குச் செலுத்தும் பணிகள் தொடங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.