ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தன்னார்வலர்களில் சுமார் 14 சதவிகிதத்தினருக்கு பலவீனம், தற்காலிக தசை வலி மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தங்களது நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் ரஷ்யா அண்மையில் அறிவித்தது. ஆனால், மூன்றாம் கட்ட சோதனைகளைச் சரியாக நடத்தாமல் ரஷ்யா அவசரம் காட்டுவதாக உலக நாடுகள் ரஷ்யாவைக் குறை கூறின. ஆனால், தங்களது மருந்து நூறு சதவீதம் சரியாக பணிபுரிவதாக ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள இந்தத் தடுப்பூசி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்ய சுகாதாரத்துறையின் அங்கீகாரத்தை பெற்றது.
இந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்காக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இதுதொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் 10 கோடி கரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வழங்கவும், இங்கு சோதனைகள் நடத்தவும் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்புட்னிக்-வி பக்கவிளைவுகள் குறித்து ரஷ்யச் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்ததாக வெளியாகியுள்ள ரஷ்ய ஊடக செய்தியில், "தடுப்பூசியின் சோதனை முடிவுகள் 100 சதவீத பங்கேற்பாளர்களில் கடுமையான பக்கவிளைவுகளையோ, நிலையான நோயெதிர்ப்பு சக்தியையோ காட்டவில்லை. 'ஸ்புட்னிக் வி' கோவிட் -19 தடுப்பூசியின் இறுதி மருத்துவ பரிசோதனைகள் தற்போது நடந்து வருகின்றன.
40,000 தன்னார்வலர்களில் 300க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ள சூழலில் ஏறக்குறைய 14 சதவிகிதத்தினர் பலவீனம், தற்காலிக தசை வலி மற்றும் அவ்வப்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற சிறிய பக்கவிளைவுகளைக் கொண்டுள்ளனர் என்று முராஷ்கோ தெரிவித்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், முராஷ்கோவின் கூற்றுப்படி நவம்பர் 3 அல்லது டிசம்பர் தொடக்கத்தில் பொது மக்களுக்கு ஸ்புட்னிக் வி விநியோகிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.