இந்தியா முழுவதும் நாளை (31-10-24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உயர் பதவிகளில் வகிக்கும் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் அதிகாரிகள் பங்கேற்ற இந்த விழாவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று தீபாவளியை கொண்டாடினார். இந்த விழாவில், விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வீடியோ வாயிலாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதே வேளையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நீயுயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு, வரும் 1ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில், இந்திய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.