விண்வெளிக்கு உலக நாடுகள் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை அனுப்புகின்றன. பல செயற்கைக்கோள் ஆயுட்காலம் முடிந்தபின்னும், சில பழுதடைந்து செயலிழந்தும் விண்வெளிக் குப்பைகளாக விண்வெளியிலேயே சுற்றித்திரிகின்றன. இப்படி விண்வெளிக் குப்பைகளாகிவிட்ட செயற்கைக்கோள்களின் அளவு மட்டும் 7,500 டன் என ஒரு தகவல் குறிப்பிடுகிறது. இவை எந்த நேரமும் பூமிக்கு அச்சுறுத்தல் நிறைந்தவை என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் இருந்து நேற்று செயற்கைக்கோள் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் வேலையில் இறங்கும். முதலில் சில வாரங்களுக்கு விண்வெளி நிலையத்தில் தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோள், மே மாதம் முதல் தனது வேலையைத் துவங்கும்.
இரண்டு கனசதுரங்கள் இணைக்கப்பட்டிருப்பது போல் இருக்கும் இந்த செயற்கைக்கோளில் ஒரு பகுதி விண்வெளி குப்பைகளைக் கண்காணிக்கவும், மற்றொரு பகுதி வலை போன்று செயல்பட்டு குப்பைகளைக் கவ்விப் பிடிக்கவும் பயன்படும். ரோபோ கைகளைப் போல அல்லாமல் குப்பைகளின் அளவு, வடிவம், நிலை பற்றிய வரம்புகள் இல்லாமலும், பொருளாதார ரீதியில் மலிவானதுமான வலை இதற்காக பயன்படுத்தப் பட்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.