உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஒன்றரை வருடமாக ரஷியா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இந்நிலையில், துருக்கி தலைநகர் அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61வது சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், ரஷியா, உக்ரைன், அல்பேனியா, அர்மேனியா உள்ளிட்ட உறுப்பு நாட்கள் பங்கேற்றுள்ளன.
இந்த மாநாட்டிற்கு வந்த உக்ரைன் நாட்டு எம்.பி. ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை, தனது உக்ரைன் நாட்டு தேசியக் கொடியை தன் கையில் பிடித்து நின்றிருந்தார். இதனை அதே மாநாட்டிற்கு வந்த ரஷிய நாட்டுப் பிரதிநிதி ஒருவர் பார்த்துள்ளார். பிறகு அந்த ரஷிய பிரதிநிதி, உக்ரைன் எம்.பி. கையில் இருந்த உக்ரைன் தேசியக் கொடியை சட்டென பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த உக்ரைன் எம்.பி. உடனடியாக அவரை துரத்திச் சென்று அவரை அடித்து உதைத்தார். பிறகு அங்கிருந்த மற்ற ரஷிய பிரதிநிதிகளும் அவர்களுடன் வந்திருந்த ரஷிய அதிகாரிகளும் உக்ரைன் எம்.பி.யை தடுத்து சமாதானம் செய்தனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.