
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், விரைவில் இந்தியா வரவுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சிமாநாடு ரஷ்யாவில் கடந்தாண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் கலந்துரையாடினார். அப்போது, உக்ரைனுடான போரை கைவிட வேண்டும் என்று விளாடிமிர் புதினிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜ் லாவ்ரோவ் கூறியதாவது, “அதிபர் விளாடிமிர் புதின் இந்திய அரசாங்கத் தலைவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகைக்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தியா வரவிருக்கும் அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியுடன், உக்ரைன் போர் மற்றும் புவிசார் அரசியல் எழுச்சி குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. உக்ரைனுடனான போரில், இந்தியா தனது நடுநிலையான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ரஷ்யாவைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானங்களிலிருந்தும் இந்தியா விலகி உள்ளது. மேலும், புதினை விமர்சிப்பதை இந்தியா தவிர்த்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்கும் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.