கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பெண் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக் குறியானது. பெண்கள் உடலையும், முகத்தையும் மறைக்கும் அளவிற்கு 'புர்கா' அணிய வேண்டும், பாடசாலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரைச்சீலை அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டனர்.
பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களை தலிபான்கள் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு பெற்ற மலாலா உள்ளிட்ட பெண்ணிய ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களது முழுஉடலை மறைக்கும் வகையில் 'புர்கா' அணியவேண்டும், பண்பாடு மற்றும் மத ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பெண்கள் தங்களது முகத்தை முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ள தலிபான்கள், இந்த உத்தரவை மீறும் பெண்களுடைய ஆண் உறவினர்களின் அரசு வேலைகள் பறிக்கப்படும் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உத்தரவை வழங்கியிருக்கிறார்கள்.