1961-ம் ஆண்டு ரஷ்யாவில் சோதனை செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் அணுகுண்டு வெடிக்கும் வீடியோவை அந்நாடு வெளியிட்டுள்ளது.
அணு ஆராய்ச்சித் துறையின் 75-வது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடி வருகிறது. அணு ஆராய்ச்சியில் அசைக்கமுடியாத சக்தியாகத் திகழும் ரஷ்யா, இந்தத் துறையில் தனது 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், 1961 ஆம் ஆண்டு தங்களது நாட்டில் சோதனை செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் அணுகுண்டு வெடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
27 டன்கள் எடையும், எட்டு மீட்டர்கள் நீளமும் கொண்ட இந்த ஹைட்ரஜன் அணுகுண்டு, ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டைவிட 3,333 மடங்கு அதிக அழிவு சக்தியைக் கொண்டது. ஜார் எனப் பெயரிடப்பட்ட இந்த குண்டு, 1961 ஆம் ஆண்டு ஆர்டிக் பகுதியில் ரஷ்யாவால் சோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பான 40 நிமிட வீடியோ காட்சி ஒன்றை ரஷ்யா தற்போது வெளியிட்டுள்ளது.
குண்டுவெடிப்பைப் பல கோணங்களில் காட்டும் அந்த வீடியோவில், பலநூறு மீட்டர்கள் கரும்புகை வானில் எழுவதை காண முடிகிறது. மேலும், இந்த குண்டுவெடிப்பு காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் 75 மைல் தூரத்திற்கு அப்பால் உணரப்பட்டதாகவும், இந்தக் காட்சியை 620 மைல் தொலைவிலிருந்தும் பார்க்கமுடிந்ததாகவும், அந்தப் புகை மட்டும் 42 மைல் தூரத்திற்குப் பரவியிருந்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.