மனிதர்கள் மூலம் பரவும் கரோனா ஆட்கொல்லி வைரஸானது உலகம் முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், சீனா - ரஷ்யா நாடுகளுக்கிடைப்பட்ட எல்லைப்பகுதி மூடப்படுவதாக ரஷ்ய பிரதமர் அறிவித்துள்ளார்.
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 15 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரஷ்யா தனது சீன பகுதியில் உள்ள எல்லைப்பகுதியை மூடுவதாக அறிவித்துள்ளது. "கொடிய கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாட்டின் தூர கிழக்கு எல்லையை மூட ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் உத்தரவிட்டுள்ளார்" என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சீன நாட்டினருக்கு மின்னணு விசா வழங்குவதையும் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சீனாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ரஷ்யா தடுத்து திருப்பியனுப்பியது குறிப்பிடத்தக்கது.