உக்ரைனில் போர் நடைபெற்று கொண்டிருக்கும் கார்கிவ், சுமி நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 130 பேருந்துகள் இயக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் தேசிய கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரான கர்னல் ஜெனரல் மிகில் இதனை அறிவித்துள்ளார். கார்கிவ் அருகில் உள்ள பெல்கோரோட் பிராந்தியத்தில் இருந்து காலை 06.00 மணி முதல் 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கார்கிவ் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் பேருந்துகள் மூலம் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. பெல்கோரோட் மற்றும் குஸ்க் ஆகிய நகரங்களில் காத்திருக்கும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவர் என ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், இக்குழுவினரை பெல்கோரோட் நகரத்துக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்களை மீட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் என்.வி.ரமணா தலைமையில் விசாரணைக்கு வந்த போது, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக் குறித்து விளக்கினார்.
உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முயற்சிகளைப் பாராட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.