
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும் எனவும் கருதப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியிலிருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி பிரதமராக அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத்தொடர்ந்து பொருளாதார நெருக்கடி, மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் அடுத்தது பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர்.
இதனால் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் கடந்த 20 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர்தான் அடுத்த பிரிட்டன் பிரதமர் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்து வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரிட்டன் பிரதமர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.