இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்துவந்தவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ. 90களின் இறுதியில் முதன்முறையாக பிரதமரான இவர், 2009 முதல் தொடர்ந்து 12 வருடங்களாக பிரதமராக இருந்துவந்தார். இந்தநிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில், பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் கட்சி அதிக இடங்களில் வென்றபோதும் பெரும்பான்மை பெற இயலவில்லை. இதனைத் தொடர்ந்து மேலும் மூன்று பொதுத்தேர்தல்கள் நடந்தன. இவ்வாறு இரண்டு வருடங்களில் நான்கு பொதுத்தேர்தல் நடைபெற்றும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்துவந்தார். இதனால் விரைவில் இஸ்ரேலில் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசமைக்க முடிவு செய்தன.
எதிர்க்கட்சிகள் அரசமைக்க முடிவு செய்தாலும், அந்த நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 60 - 59 என ஒரு ஓட்டு வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெரும்பான்மையை உறுதிசெய்தது. இதனையடுத்து 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, அப்பதவியை இழந்துள்ளார். அவரது கட்சி எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.
இதனையடுத்து நஃப்தாலி பென்னெட் இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இவர் அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பிரதமராக இருப்பார். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் யெய்ர் லாப்பிட் என்பவர் பிரதமர் பதவி வகிக்கவுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நஃப்தாலி பென்னெட்டிற்கு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.