இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 1 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே தனது பிடியில் இருந்த பிணைய கைதிகளில் அமெரிக்காவை சேரந்த இருவரை ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் விடுவித்திருந்த நிலையில், தற்போது மேலும் இரு பிணைய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. வயது முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக நூரிட் கூப்பர்(79), யோச்சீவ்டு லிஃப்ஷிட்ஸ்(85) ஆகிய இருவரையும் ஹமாஸ் அமைப்பு விடுவித்ததையடுத்து பத்திரமாக இஸ்ரேல் டெல் அவிவ்க்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பலரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க கோரியும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.