இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. இதனால் பொங்கியெழுந்த பொதுமக்கள் இரவோடு, இரவாக அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே இல்லத்தை முற்றுகையிட்டு பல மணி நேரம் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனாவால் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய அந்நிய செலாவணியைக் கரைத்ததால், இலங்கையின் பண மதிப்பு செல்லா காசாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதனால் மலிவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட நிறைய பணத்தைச் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் பொதுமக்கள். தொழில்கள் முடங்கிவிட்டன. கரோனாவால் சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து விட்டது. தேயிலை மற்றும் ஆடைகள் ஏற்றுமதி சரிவால், அந்நிய செலாவணி வறண்டு போய்விட்டது.
கிட்டத்தட்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு திவாலான நிலையில் இருக்கிறது இலங்கை. இதனால் நாளுக்கு நாள் இலங்கை மக்களுக்கு பிரச்சனைக் கூடிக் கொண்டே போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் டீசலை வாங்குவதற்கு கூட, நீண்ட வரிசையில் காத்திருந்தும் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இப்படி, விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் தட்டுப்பாடு, நாள் முழுவதும் நீடிக்கும் மின்வெட்டு ஆகியவற்றால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள் இலங்கை மக்கள்.
விளைவு அவர்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும், அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மீது திரும்பியுள்ளது. பொருளாதார சீர்குலைவை விரைவில் சீர்தூக்க முடியாவிட்டால், பதவி விலகி மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்ற கொந்தளிப்புடன் கொழும்பில் உள்ள அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள்.
அப்போது, பொதுமக்களை கலைப்பதற்காக ராணுவமும், காவல்துறையும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி திருப்பி அனுப்ப எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. மாறாக, மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டியுள்ளது. கற்கள், காலணிகள் என்று கையில் கிடைத்தப் பொருட்களையெல்லாம் வீசி காவல்துறையினருக்கு பதிலடிக் கொடுத்துள்ளனர்.
அதிபர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு தீ வைத்து தங்களது ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவோ மக்களைச் சந்திக்க மனமில்லாமல், தனது இல்லத்தை விடுத்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சிப் பரவுவதைத் தடுக்க, பல இடங்களில் இணையதளமும், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.