ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவு திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் 57 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு நேற்று கூடி, ஆப்கானிஸ்தான் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தலிபான் அரசு கவிழ்ந்தால் சர்வதேச அளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அச்சுறுத்தலாக மாறும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் கூறியுள்ளதாவது; வெளிநாடுகளிலிருந்து வரும் உதவி வறண்டு போனால், வெளிநாட்டு இருப்புக்கள் முடக்கப்பட்டால், வங்கி அமைப்பு முடக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எந்த நாடும் வீழ்ச்சியடையும். தாலிபான்களுடன் இருபது வருடமாக பிரச்சனை இருந்தாலும், 40 மில்லியன் ஆப்கானிஸ்தான் குடிமக்களிடமிருந்து ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பிரிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் பேசினேன். ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்க, மனித உரிமைகள், பெண் உரிமைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கம் போன்ற நிபந்தனைகளை அமெரிக்கா வைத்துள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் வேறுபட்டவை. மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் பற்றி நாம் பேசும்போது, நாம் கலாச்சாரங்களைப் பற்றி உணர வேண்டும். முன் நிபந்தனைகளுக்கு இணங்க தலிபான்கள் தயாராக உள்ளனர் என்றார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆப்கானிஸ்தான் குழப்பத்தை நோக்கிச் செல்லும்.
அரசு ஊழியர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்க முடியாத எந்த அரசும் கவிழ்ந்து விடும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் திறன் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இல்லையென்றால், ஐஎஸ் பயங்கரவாதக் குழு அச்சுறுத்தலாக மாறும்.சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஐஎஸ் அமைப்பிற்கு வல்லமையுள்ளது. நிலையான ஆப்கானிஸ்தான் அரசால் மட்டுமே அதை சமாளிக்க முடியும். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.
இம்ரான் கான் தனது பேச்சின் நடுவே காஷ்மீர் விவகாரத்தையும் இழுத்தார். அவர், "பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் மக்கள், தங்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக முஸ்லிம் உலகில் இருந்து ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.