அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் இன்று (07.01.2021) கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு அமெரிக்க தலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி, ‘சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் 15 நாட்களுக்குப் பொது அவரச நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 21 ஆம் தேதி வரை அங்கு பொது அவசர நிலை நீடிக்கும் என வாஷிங்டன் மேயர் அறிவித்துள்ளார்.