ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்துக் கிடக்கின்றனர்.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைத்து வந்து, அங்கிருந்து அவர்களை விமானங்கள் மூலம் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ருமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடைவிடாது நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
எனினும் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து உக்ரைன் அதிபர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்தும் எடுத்துரைத்தேன். அவர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது நயவஞ்சகமாக துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உக்ரைனில் நடந்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமரிடம் விரிவாக விளக்கினார். தற்போதைய மோதலால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பு குறித்து பிரதமர் தனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்தார். வன்முறையை உடனடியாக நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்குத் திரும்பவும் அவர் தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியாவின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான இந்தியாவின் ஆழ்ந்த அக்கறையையும் பிரதமர் தெரிவித்தார். இந்திய குடிமக்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்ற உக்ரைனிய அதிகாரிகளின் உதவியை அவர் கோரினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.