சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் பிரச்சனை ஆகும். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
மும்பையில் பிறந்த இஸ்லாமியரான சல்மான் ருஸ்டி, சிறுவயதிலேயே இங்கிலாந்து நாட்டில் குடியேறினார். பிரபல எழுத்தாளரான இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியிருந்தாலும், இஸ்லாமுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட 'THE SATANIC VERSES' என்ற நாவல் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.
கடந்த 1988- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்பட்ட அந்த நூலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மத உணர்வைப் பாதிக்கும் வகையிலான புத்தகம் என்பதால் அதற்கு முதல் நாடாக இந்தியா தடை விதித்தது. கடந்த 1989- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சல்மான் ருஷ்டியின் நாவல் பிரதிகள் இங்கிலாந்தின் பிராஃபோர்ட் நகரில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் புத்தகம் வெளியிடப்பட்டதை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க கலாசார மையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். 1989- ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியைக் கொல்ல ஈரான் மன்னரான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற மத ஆணையை வெளியிட்டார்.
கடந்த 1991- ஆம் ஆண்டு ருஷ்டியின் ஜப்பானிய மொழி பெயர்ப்பாளர் கொலை செய்யப்பட்டதுடன், இத்தாலிய மொழி பெயர்ப்பாளர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு சல்மான் ருஷ்டியின் துருக்கி மொழி பெயர்ப்பாளரை குறி வைத்து ஹோட்டல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதில் 37 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 1998- ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டி மீதான ஃபத்வா உத்தரவை நிறைவேற்றப் போவதில்லை என்று ஈரான் அரசு கூறியது. ஆனாலும் சல்மான் ருஷ்டி மீதான எதிர்ப்பு முடிவுக்கு வரவில்லை. கடந்த 1999- ஆம் ஆண்டு பிப்ரவரியில் இஸ்லாமியர்களால் டெல்லியில் கடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2007- ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியால் சல்மான் ருஷ்டிக்கு 'மாவீரர்' என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. 2016- ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் தலைக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு ஆண்டுகள் கழித்து மேற்கு நியூயார்க்கில் இலக்கிய நிகழ்வில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.