குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதை ஈராக் மக்கள் வீதிகளில் நடனமாடி கொண்டாடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடியாக அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா படை ஆதரவாளர்கள் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு திரண்டு போராடியதோடு, தூதரகத்தையும் சூறையாடினர். இந்த சூழலில், இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் இதனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற தளபதி கொல்லப்பட்டதை ஈராக் மக்கள் கொண்டாடுவதாக கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பதிவில், "தளபதி சுலைமான் இனி உயிருடன் இல்லை என்பதற்காக, நன்றியுடன் இராக் மக்கள் தெருவில் நடனமாடுகின்றனர்” என்று பதிவிட்டு அதனுடன் மக்கள் வீதிகளில் ஓடும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்
Iraqis — Iraqis — dancing in the street for freedom; thankful that General Soleimani is no more. pic.twitter.com/huFcae3ap4
— Secretary Pompeo (@SecPompeo) January 3, 2020