இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், பாலஸ்தீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பாலஸ்தீனத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதனை தொடர்ந்து, நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அந்த வகையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேசினார். அப்போது, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். மேலும் அவர், காசாவில் நடக்கும் துயர சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், காசா-இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூல தீர்வு காண வேண்டுமென்றும் தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நியூயார்க்கில் அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தேன். பிராந்தியத்தில் அமைதியை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்தேன்.. பாலஸ்தீன மக்களுடனான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.