ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்களது இடைக்கால அரசை அமைத்துள்ள நிலையில், தலிபான்களுக்கு எதிராக மக்கள் போராட்டமும் வெடித்துள்ளது. இந்தப் போராட்டங்களில் பெரும்பான்மையாக கலந்துகொள்ளும் பெண்கள், தங்களுக்கான உரிமைகளை வலியுறுத்திவருகின்றனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைச் சாட்டையைக் கொண்டு தாக்குவதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாட்டில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க தலிபான்கள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.
ஆப்கனில் போராட்டம் நடத்த நீதித்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என தலிபான்கள் அறிவித்துள்ளதாக ஆப்கன் நாட்டு ஊடகமான பஜ்வாக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், போராட்டம் நடத்தினால் அது பற்றிய விவரங்களை 24 மணி நேரத்திற்கு முன்பே நாட்டின் பாதுகாப்பு ஆணையங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும், போராட்டத்தின் நோக்கம், நேரம், இடம், போராட்டத்தில் எழுப்பப்படவுள்ள கோஷம் மற்றும் போராட்டம் குறித்த மற்ற தகவல்களும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக பஜ்வாக் ஊடகம் தெரிவித்துள்ளது.