கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ட்ரம்ப் எடுத்துக்கொள்வது அவரின் உயிருக்கே ஆபத்தாகலாம் என சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் மாளிகையில் பணியாற்றும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒருவார காலமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையைச் சாப்பிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்தார்.
மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், அந்த மருந்தையே தான் எடுத்துக்கொள்வதாக ட்ரம்ப் தெரிவித்தது, அந்நாட்டில் சர்ச்சையானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர் நான்சி பெலோசி, "அவர் நமது ஜனாதிபதி, விஞ்ஞானிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தைத் தற்காப்புக்காக அவர் எடுத்துக்கொள்ள மாட்டார் என நான் நினைக்கிறேன். குறிப்பாக அவரது வயதுடையவர்கள், அதுவும் உடல் எடை அதிகமானவர் இந்த மருந்தை உட்கொள்வது ஒரு நல்ல யோசனை அல்ல என நான் நினைக்கிறேன்" என்றார்.