உலகின் முதல் பனிஉடைப்பான்கள் அல்லாத கப்பல்! : பயணமும், சாதனையும்
உலக கடல் வாணிப வரலாற்றில் பனி உடைப்பான்கள் அல்லாத கப்பல் ஒன்று, வடக்கு பிராந்தியங்களின் கடல்வழியே முதன்முறையாக சரக்குகளை ஏற்றிச்சென்றுள்ளது.
ரஷ்யாவில் கட்டமைக்கப்பட்ட 300 மீ நீளமுள்ள கிறிஸ்டோபி டி மார்கெரி என்ற இந்தக் கப்பல், பனிக்கட்டிகள் நிறைந்த கடல் வழிகளின் வழியே சுலபமாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலகுரக இரும்பினால் ஆன மேற்பரப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல், வணிகரீதியிலான பயன்பாட்டிற்கான ஆர்க் 7 சான்றிதழைப் பெற்றுள்ளது. அதாவது, இந்தக் கப்பலால் 2.1 மீ தடிமனுள்ள பனிப்பாறைகளின் வழியே சுலபமாக செல்ல முடியும்.
ஆறரை நாட்களில் நார்வேயில் இருந்து தென் கொரியா வரையிலான தனது பயண தூரத்தைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ள இந்தக் கப்பல், 1 மீட்டர் தடிமனுள்ள பனிப்பாறையில் சராசரியாக 14 நாட் வேகத்தில் பயணித்திருக்கிறது. இந்தக் கப்பலில் திரவ இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே பனிநிறைந்த பாதைகளில் கடல் வாணிபம் செய்ய இயலும் என்ற நிலையை மாற்றி, வருடம் முழுவதும் வாணிபம் செய்ய இந்தக் கப்பல் வழிவகுத்திருக்கிறது.
உலக வெப்பமயமாதலால் கடந்த 30 ஆண்டுகளாக பனிக்கட்டிகள் உருகிவருவதும், இந்தக் கப்பல் பயணத்திற்கான வாய்ப்பாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ‘ஆர்க்டிக் திறப்பு விழாவின் மிகப்பெரிய நிகழ்வு இது. கடல் வாணிபத்தில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடல் வாணிபம் என்றாலே நம்பிக்கையற்ற பாதையில் நடந்து செல்வதைப் போன்றது. அதுவும் பனிப்பாறைகளின் நடுவே பயணிப்பதன் அபாயத்தை விளக்கத்தேவையில்லை. அந்த வகையில் ஆண்டு முழுவதும் கடல் வாணிபத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கும் இந்தக் கப்பல் கொண்டாடப்பட வேண்டிய கண்டுபிடிப்பே.
- ச.ப.மதிவாணன்