முன்தினம் பரந்தூர் சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை வாகனத்தில் இருந்தபடி பேசுகையில், “கிட்டத்தட்ட 910வது நாட்களுக்கு மேலாக உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசினார். அந்த குழந்தையோட பேச்சு மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்கள் எல்லோரையும் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது.
நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?. உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களுடைய வசதிக்காக அவர்களோடு நிற்கிறதும், அவர்களோடு நிற்காமல் இருக்கிறதும், நாடகம் ஆடுறதும் நாடகம் ஆடாமல் இருக்கிறதும். அது சரி, நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராட ஆரம்பித்தால் பிரச்சனை தான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உங்களுடைய விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்' என தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய்யின் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''எல்லாம் ஏதேதோ பேசுகிறார்கள். நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுகிறான். அவங்க அப்பனையே நாங்க தான் அறிமுகப்படுத்தினோம். அவன் எல்லாம் இப்பொழுது நமக்கு சவால் விடுகிறான். ஒன்றை மட்டும் சொல்கிறேன் திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததாகவும் இல்லை நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறுகள் நிறைய இருக்கிறது அதற்குள்ளே போகக்கூடாது. பேசுவதற்கு ஒரு யோகிதை வேண்டும். நேற்று அந்த சின்ன பையன் பேசுகிறான் நாடகமாடுவதில் நாங்கள் எல்லாம் கைதேந்தவர்கலாம். நீ யார்ரா? உங்க அப்பன் யாரு? உங்க அம்மா யாரு? என கேட்டால் பதில் சொல்ல முடியுமா? ஆக நடிப்பது மட்டுமல்ல நடிப்பதற்கு வசனம் எழுதிக் கொடுத்து நாட்டுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தான் நீங்கள் எல்லாம் என்பதை மறந்து விடக்கூடாது.
உங்க அப்பா யாரு எங்க தலைவர் எழுதிய வசனத்தை டைரக்ஷன் பண்ண ஆளு. இதையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று பேசுகிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. நீ பிறப்பதற்கு முன்னாடியே அந்த காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்கள் மட்டும்தான் போலீஸில் இருப்பார்கள். பெண்களுக்கு போலீசில் இடம் கிடையாது. முதன் முதலில் காவல்துறையில் பெண்களுக்கு பணியை ஏற்படுத்திக் கொடுத்தவர் கலைஞர். 1973-74 இல் சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷனில் 25 பெண்களை முதன் முதலில் உமன் கான்ஸ்டபிளாக நியமித்தார். அதனுடைய விளைவு 1976 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த கலைஞருடைய மகன் மு.க.ஸ்டாலின் முரசொலி மாறன் இரண்டு பேரையும் கைது செய்துவிட்டு அவர்கள். பக்கத்தில் இருந்தவர்கள், மற்ற அமைச்சர்களை எல்லாம் விட்டு விட்டார்கள். அவருடைய குடும்பத்தில் மட்டும் இரண்டு பேர் கைது செய்தார்கள். சித்திரவதை செய்தார்கள். சுற்றி இருப்பவர்களை எல்லாம் துன்புறுத்தினார்கள். ஆனால் அதையும் தாங்கிக் கொண்டு தைரியமாக கட்சியை தூக்கிப் பிடித்தார் கலைஞர்'' என்று காட்டமாக பேசினார்.