அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிபர் பதவியேற்பு விழா இன்று (20.01.2025) இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் நடைபெற்றது. அமெரிக்காவின் 50வது துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதே சமயம் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். 2வது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். அதில் அவர், “இனிமேல் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும். சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை விதிக்கப்படும். மேலும், ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய உத்தரவுகளில் விரைவில் கையெழுத்திட உள்ளேன்” என்று பேசினார்.
அதன் பிறகு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற உடனேயே டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாள உலக சுகாதார அமைப்பில் (WHO) தவறிவிட்டதாக பேசி, அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில், 2வது முறையாக அதிபராக பொறுப்பேற்றதும் மீண்டும் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் புகலிடம் மீது கடுமையான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன் பிறகு, தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்தார். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறியவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை டிரம்ப் ரத்து செய்தார்.பதவியேற்பதற்கு முன்பாக, அமெரிக்காவில் என்ன என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒவ்வொரு நாளும் அறிவித்து வந்த டொனால்ட் டிரம்ப், அதிபராக பதவியேற்ற பிறகு அதை உறுதிப்படுத்தும் விதமாக உத்தரவு பிறப்பித்து வருகிறார்.