இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. அதேநேரத்தில் ரஷ்யா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கரோனா பெருந்தொற்றின் வேகம் குறையவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், கடந்த 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுமார் 9300 மரணங்கள் பதிவாகியுள்ளன. எனவே பெருந்தொற்றின் வேகம் குறையவில்லை என தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனம், உலகை ஆறு பகுதிகளாக பிரித்துள்ள நிலையில், இந்த ஆறு பகுதிகளில் ஐந்தில் கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதாகவும் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சதவீதம், இரண்டு வாரங்களில் முப்பதிலிருந்து நாற்பதாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சௌமியா சுவாமிநாதன், டெல்டா வகை கரோனா வேகமாக பரவுவது, உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் வேகம் குறைவாக இருப்பது, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது ஆகியவை கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்றும் கூறியுள்ளார்.