பின்லாந்து நாட்டின் கைமென்லாக்சோ பிராந்தியத்தின் ஜாலா பகுதியை சேர்ந்தவர் டூமாஸ் கேட்டினன். இவர் பழுதடைந்த தனது டெஸ்லா எஸ் மாடல் காரை பழுதுபார்ப்பதற்காக டெஸ்லா சர்வீஸ் சென்டரில் விட்டுள்ளார். இந்தநிலையில் ஒருமாதம் கழித்து டெஸ்லா சர்வீஸ் சென்டரில் காரில் ஏற்பட்ட பழுதை நீக்கமுடியாது என்றும், பேட்டரி செல்லை மொத்தமாகத்தான் மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பேட்டரி செல்லை மொத்தமாக மாற்ற 20,000 யூரோக்கள் ஆகும் என்பதால் (இந்திய மதிப்பில் 17 லட்சம்) டூமாஸ் கேட்டினன், தனது காரை 30 கிலோ டைனமைட்டை வைத்து வெடிக்க செய்துள்ளார். எலான் மஸ்க்கின் உருவ பொம்மையை காரின் முன் சீட்டில் வைத்து டூமாஸ் கேட்டினன் அவரது காரை வெடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
டூமாஸ் கேட்டினன், காரை வெடிக்க செய்வதை ஒரு யூடீயுப் சேனல், வீடியோ எடுத்து பதிவேற்றியுள்ளது. அதனை சில மணிநேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். காரை வெடிக்க செய்யும் முன்னர் பேசியடூமாஸ் கேட்டினன், "நான் அந்த டெஸ்லாவை (காரை) வாங்கியபோது, முதல் 1,500 கிமீட்டருக்கு நன்றாக இருந்தது. அது ஒரு சிறந்த கார். பின்னர் பழுதானது. எனவே எனது காரை சர்வீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்ல டோ-டிரக்கிற்கு ஆர்டர் செய்தேன். ஏறக்குறைய ஒரு மாதமாக கார் டீலரின் ஒர்க்ஷாப்பில் இருந்தது. கடைசியாக எனது காரை எதுவும் செய்ய முடியாது என்று அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முழு பேட்டரி செல்லையும் மாற்றுவதே ஒரே வழி. அதற்கு எனக்கு குறைந்தபட்சம் 20,000 யூரோக்கள் செலவாகும். இப்போது நான் முழு காரையும் வெடிக்கச் செய்யப் போகிறேன், ஏனெனில் உத்தரவாதம் உள்பட எதுவும் இல்லை" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.