இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 37 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திகொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேலில் பாலஸ்தீன கைதிகள் இரவு பகல் பாராது தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா 8 மாத காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்த அவர், “இஸ்ரேலிய சிறையில் இரவு பகலாக சித்ரவதைக்கு பாலஸ்தீன கைதிகள் உள்ளாக்கப்படுகின்றனர். பல கைதிகள் விசாரணையில் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேலிய மருத்துவர்களும், செவிலியர்களும் கைதிகளை அடித்து கொடுமைப் படுத்துகின்றனர். சாப்பிடுவதற்கு சரியான உணவு பொருட்கள் கொடுப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு ரொட்டிக்கு மேல் சாப்பிடவில்லை. இஸ்ரேலியர்கள் பாலஸ்தீன கைதிகளை உயிரற்ற பொருளாகவே பார்க்கின்றனர்” என்று கண்கலங்கினார்.