ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே பதினைந்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையானது நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை உக்ரைன் ஏற்க மறுத்ததே ஆகும். இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்துடனான அந்தப் பேட்டியில், "உக்ரைனை நேட்டோவில் இணைக்க அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை. ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டு உக்ரைனை தங்களுடன் சேர்த்துக்கொள்ள நேட்டோ அஞ்சுகிறது. எதையும் காலில் விழுந்து கெஞ்சிப்பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதுஒருபுறம் இருக்க ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் லிவிவ் நகரில் இன்று அதிரடி தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. முக்கிய கட்டடங்கள் மீது நடைபெற்ற இந்த தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளனர். 65 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். லிவிவ் நகரத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.