நீரில்லா நாடு சுடுகாடு என்பார்கள், ஆனால் அதை மாற்றி நீரில்லாத நாடுகள் மற்ற நாடுகளை இயக்கும் சூட்சமத்தை கொண்டிருக்க முடியும் என்பதை நிரூபித்தது சவூதி அரேபியா. சவூதி அரேபியா இவ்வளவு பிரசித்தி பெற்றதற்கும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டு, கடைசியில் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் சவூதியைக் கொண்டு வந்ததற்கும் 1938ம் ஆண்டு இன்றைய நாளில் நடந்த நிகழ்வுதான் காரணம். உலகமே சவூதி அரேபியாவை உற்று நோக்கவும் இதுதான் காரணம். 1938ம் ஆண்டு மார்ச் 3 அன்றுதான் சவூதி அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்தான் சவூதி அரேபியாவும், அதன் பணமதிப்பும் எகிற ஆரம்பித்தது. இன்றும் அதன் மதிப்பு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. 80 ஆண்டுகளாக எண்ணெய் வளத்தை கொட்டிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், ஆள்பவர்கள், ஆட்சிமுறை எல்லாம் மாறினாலும் எண்ணெய் வணிகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த ஐக்கிய அமீரகமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளத்துக்காக போரும், படுகொலையும் ஆக்கிரமிப்பும் நடந்துகொண்டே இருக்கின்றன. 1938ல் ஆரம்பித்து இன்றும் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வளம் தீர்ந்துவிடுமா என்பதைதான் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன.