இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. ஆனால் எதையும் இஸ்ரேல் கண்டுகொள்ளாமல் தான் சொன்னபடி ஹமாஸ் அமைப்பில் இருக்கும் கடைசி நபரை அழிக்கும் வரை யுத்தம் முடிவுக்கு வராது என்று தொடர்ந்து காசா மீது குண்டு மழையைப் பொழிந்து வருகின்றது. இதில் காசாவில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இந்த நிலையில், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசைக் கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் இன்று (26-02-24) சமர்ப்பித்துள்ளார். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.