இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தநிலையில், மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அளித்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளது. கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை வாங்க, தனது ஒருங்கிணைந்த விநியோக சங்கிலி மூலமாக உதவ ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது. ஆனால் தங்களிடம் உபகரணங்களை வாங்க வலுவான அமைப்பு இருப்பதால், இப்போது அது அவசியமில்லை என இந்தியா அதனை நிராகரித்துள்ளது.
இந்த தகவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர், "இந்தியாவிற்கு வழங்கப்பட்ட உதவியை திரும்பப் பெறவில்லை. மேலும் எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவ விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு தொடர்ந்து உலக நாடுகள் உதவியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.