பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது எம்.பி.பதவியும் பறிபோயுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராக இம்ரான்கான் பொதுக்கூட்டங்களையும் நடத்திவந்தார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் நீதிபதியையும், போலீஸ் துறையையும் மிரட்டியதாக அவர் மீது இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு அலி ஜாவத் புகார் செய்தார். அதையடுத்து, அவர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நன்கொடை வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், கட்சிக்கு நிதி திரட்டியதில் முறைகேடாக செயல்பட்டதாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்ய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், அவர் கைது செய்யப்படலாம் எனும் தகவலும் அப்போது வெளியாகின.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பெற்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என எதிர்க்கட்சிகள் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தனர். இதனை விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இம்ரான் கானின் எம்.பி. பதவியை பறித்துள்ளது. மேலும், அவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் தேர்தலில் பங்கேற்கவும் தடை விதித்துள்ளது. இதனை ஏற்க மறுத்து இம்ரான் கானின் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். அதேபோல், தேர்தல் ஆணையத்தின் வெளியே திரண்டு கண்டன முழுக்கங்களையும் எழுப்பினர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் தாம் குற்றமற்றவர் என்றும் தனக்கு நீதி கிடைக்கும் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணி நடத்தவிருப்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.