நள்ளிரவு நேரத்தில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 20 பயணிகள் பலியான சம்பவம் பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகருக்கு நேற்றிரவு 50-க்கும் மேற்பட்ட பயணிகளோடு சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது, ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் ஒன்று அந்த பகுதியை அதிவேகமாக கடந்துள்ளது. இதில் அந்த ரயில் என்ஜினில் சிக்கிய அந்த பேருந்து சுமார் 200 அடி தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்டு தூக்கிவீசப்பட்டது. இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20 பேர் பலியாகியுள்ள சூழலில், 60 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.