பாகிஸ்தானில், பெண் கல்விக்கு ஆதரவாக பிபிசி உருதில் குரல் கொடுத்த மலாலா தனது 15-வது வயதில் பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பள்ளி வாகனத்தில் வைத்து சக மாணவர்கள் முன்னிலையில் தாலிபான்களால் 2012-ல் தலையில் சுடப்பட்டார். இதன் பிறகு குடும்பத்துடன் லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த அவர் தன் தலைப்பகுதியின் மண்டையோட்டில் ஏற்பட்ட பாதிப்பை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து குணமடைந்தார்.
இந்த தாக்குதல் பற்றி தலிபான்கள் தரப்பில் மலாலா மேற்கத்திய கலச்சாரத்தை பாகிஸ்தானில் பரப்பினார் (promoting western culture) என கூறியது.
லண்டனில் குடும்பத்துடன் தங்கியிருந்த மலாலா 2014-ல் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார். அதன் பிறகு ஐ.நாவின் இளைஞர் தூதராகவும் உள்ளார். தொடர்ந்து பெண் கல்விக்கும், பெண்கள் உரிமைக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து தான் தாக்கப்பட்டதுக்கு பிறகு முதன் முறையாக பலத்த பாதுகாப்புகளுடன் பாகிஸ்தான் சென்ற மலாலா இஸ்லாமாபாத் பிரதமர் அலுவலகத்தில் மனதை ஆர்ப்பரிக்கும் வகையில் உரையாற்றியுள்ளார்.
அதில் '' என்னுடைய கனவு பாகிஸ்தான் வரவேண்டும் இங்கு அமைதி நிலவ வேண்டும், எந்த ஒரு பயமும் இல்லாமல் தெருக்களின் நடந்து ஒவ்வொரு மக்களையும் சந்தித்து பேச வேண்டும் என்பதுதான். என் தாயகம் வந்தது மிகவும் மகிழ்வைத் தருகிறது எல்லாம் உங்களால்தான் '' என உருக்கமாக உரையாற்றினார்.