உலகின் பல பகுதிகளில் மீன் மழை பெய்ததாக செய்திகளும், அதற்கான புகைப்படங்களும் வைரலாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சீனாவில் ஆக்டோபஸ் மழை பெய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ளது குவிண்டாவோ நகரம். கடற்கரை நகரமான இந்தப் பகுதியில் கடந்த புதன்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் சீற்றத்தால் மரங்கள் சாய, வெள்ளம் பெருக்கெடுத்து ஓட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையின்போது ஆக்டோபஸ், இறால் மற்றும் நட்சத்திர மீன்கள் காற்றில் பறந்து வந்து விழுவதைப் பார்த்த பொதுமக்கள் அதிசயத்து வேடிக்கை பார்த்துள்ளனர்.
பறந்து விழும் ஆக்டோபஸ், கார் கண்ணாடிகளில் சிதறிக் கிடக்கும் இறால் மற்றும் நட்சத்திர மீன்கள் என இந்த மழையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த கடல்வாழ் உயிரினங்களின் மழை குறித்து வானிலை ஆராய்ச்சி மையம், அதீத காற்று, சூறாவளி காரணமாக கடலில் இருந்த உயிரினங்கள் காற்றால் இழுத்து வரப்பட்டு வீசப்பட்டிருக்கின்றன என விளக்கமளித்துள்ளது. என்னவாக இருந்தாலும் அன்றைய தினத்தை விருந்தாக்கியிருக்கிறது அந்த பெருமழை.